கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை துவக்கம்

நித்திரவிளை: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தூக்க திருவிழா கடந்த 30 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சையில் பங்கேற்க 1687 பேர் பதிவு செய்தனர். அது போல் குழந்தைகளை தூக்க தேரில் வைத்திருக்கும் தூக்ககாரர்கள் கோயிலில் தங்கி விரதம் இருந்து வந்தனர். 10வது நாளான இன்று அதிகாலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்ககாரர்கள் அம்மன் சன்னதியில் முட்டுகுத்தி நமஸ்காரம் செய்தனர்.  தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளல் நடந்தது. பின்னர் பூஜைகள் முடிந்து காலை 6.20 மணிக்கு குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஆரம்பமானது.

தூக்ககாரர்களும், பக்தர்களும் சரண கோஷம் முழங்க தூக்க தேரை இழுத்து ஒரு முறை கோயிலை சுற்றி வர முதலில் நான்கு அம்மன் தூக்கம் முடிவடைந்தது.     தொடர்ந்து குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடந்தது. ஒருதடவை தூக்க தேரானது கோயிலை சுற்றி வரும் போது நான்கு தூக்க நேர்ச்சை முடிவடைந்தது. இன்றைய விழாவில் 1687 குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை, நான்கு அம்மன் தூக்கம், 35 சிறப்பு தூக்கம் என மொத்தம் 1726 தூக்க நேர்ச்சை நடக்கிறது.இந்த வருடம் அதிகமான தூக்க நேர்ச்சை பதிவாகி இருக்கிறது. ஆகவே நேர்ச்சை தூக்கம் நாளை மதியம் வரை நடக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.   தமிழக-கேரள அரசின் சிறப்பு பேருந்துகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டிருந்தது.

 விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணைத் தலைவர் பிரேம்குமார், துணைச் செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன் நாயர், கிருஷ்ணகுமார், சந்திரசேகரன் நாயர், கிருஷ்ணன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: