போளூர் அருகே அரசு தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை : மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை: போளூர் அடுத்த ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதையொட்டி, மாணவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போளூர் ஒன்றியம், ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நேற்று முன்தினம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் க.மோகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை என்.மைதிலி வரவேற்றார்.

இதில், முதலாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 15 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, பள்ளியில் கிராம கல்வி குழு கூட்டம், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், கிராம கல்வி குழு தலைவர் ர.ரேகா, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியை ஸ்வீட்டி எம்பிரஸ் நன்றி கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: