செயற்கைக்கோள் தகர்ப்பு தோல்வி பயத்தால் வெளியிட்ட ரகசியம்: பாஜ. மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘செயற்கைக்கோளை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் விண்வெளி ரகசியத்தை வெளியிட்டதற்கு பாஜ அரசின் தோல்வி பயமே காரணம்’’ என ப.சிதம்பரம் தெரிவித்தார். விண்வெளியில் சுற்றி வந்த செயற்கைக்கோளை ஏவுகணை வீசி 3 நிமிடத்தில் தாக்கி அழித்து இந்தியா சமீபத்தில் சாதனை செய்தது. ‘மிஷன் சக்தி’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, செயற்கைக்கோளை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா விளங்குவதாகவும், இந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சாதனை குறித்து தெரிவித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவன தலைவர் ,`செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசு அனுமதி வழங்கியது.  இதையடுத்து கடந்த 6 மாதமாக இதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டு, 100 விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தனர்’ என தெரிவித்தார்.

 இந்த சாதனை குறித்து பிரதமர் அறிவித்தது தேர்தல் விதிமீறல் என பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், செயற்கைக்கோளை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தை பகிரங்கமாக வெளியிட்டதற்காக பாஜ அரசுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் டிவிட்டர் பதிவில், `செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் திறன் பல ஆண்டுகளாக இருந்தது. புத்திசாலி அரசுகள் ரகசியத்தை காப்பாற்றி வந்த நிலையில், பாஜ அரசு அதை வெளியிட்டது துரோகச் செயல். தேர்தல் நேரத்தில் ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம்’ என கூறியுள்ளார். தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலை மேற்கோள்காட்டி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள மற்றொரு டிவிட்டர் பதிவில், `இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் விகிதம் 7.1% ஆக உள்ளது. இது, கடந்த 45 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். இதற்கு காரணம் என்ன மோடி? தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலக தகவலின்படி 4 கோடியே 70 லட்சம் வேலைவாய்ப்புகளை நாடு இழந்துள்ளது ஏன்? என பிரதமர் மோடி விளக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: