நீட் தேர்வு ரத்து, விவசாய-கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: சிவகங்கை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி

சிவகங்கை: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி அளித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று, தி.மு.க. கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மண் மானம் காத்த மருதுபாண்டியரின் பூமி. அப்படிப்பட்ட சிவகங்கை சீமைக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மருதுபாண்டியர்கள் வீர தீரத்திற்கு மட்டுமல்லாது, மத, சமூக நல்லிணக்கத்திற்கும் புகழ் மிக்கவர்கள்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வழிபாட்டு தலங்களுக்கு நிலம் கொடுத்தவர்கள். இது அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கமாக வாழக்கூடிய பூமி. அதனால், மதவெறி சக்தியை ஓட ஓட விரட்ட வேண்டும். தமிழகத்தின் மானத்தை, இந்தியாவின் மானத்தை நாம் காப்பாற்ற வேண்டும். மோடியின் பாசிச ஆட்சியை அப்புறப்படுத்த ஏப்ரல் 18ல் தேர்தல் நடக்கிறது.  மேலும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு அன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை அகற்றவும், தமிழகத்தில் அக்கிரமங்கள், அநியாயம், கலெக்சன், கரப்சன் போன்றவற்றுடன் நடக்கும் ஆட்சியை அகற்றவும் நடக்கும் தேர்தல் இது. கார்த்தி சிதம்பரம் இங்கு வேட்பாளராக இருக்கிறார். தகுதி அடிப்படையில்தான் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் துணையோடு எதிர்த்து நிற்கக் கூடிய பாஜ வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். அவரது வண்டவாளங்களும் தெரியும். தமிழகத்திலும், இந்தியாவிலும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் உள்ள அவரைப் போன்ற ஒரு அரசியல்வாதியை நாம் பார்க்க முடியாது.

நமது தமிழ் சமுதாயத்தினருக்கு இடையே உள்ள நல்லிணக்கம், நிம்மதியை கெடுக்க வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி, கலவரத்தை தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, அவதூறு, பொய் பேசுவது இதுதான் எச்.ராஜாவின் தொழில். பாஜவில் உள்ள அனைவரையும் நான் அப்படி சொல்ல மாட்டேன். அரசியல், கொள்கை, தத்துவம் குறித்து விமர்சனம் செய்வது ஜனநாயக உரிமை. ஆனால் கொச்சைத்தனமாகவே பேசி, கலவரத்தை உண்டு பண்ணக்கூடிய எச்.ராஜாவை போன்ற ஆட்கள் ஜனநாயகத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். இவர் சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கிறார் என்று நாடாளுமன்றத்தில் சொன்னால், அது சிவகங்கைக்குத்தான் அவமானம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தியும், திராவிட இயக்க சிந்தனைகளை இழிவுபடுத்தியும் பேசி வரும் இவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். (தயாராக இருக்கிறீர்களா? என்று ஸ்டாலின் கேட்க, ‘தயார்’ என்று மக்கள் கோஷமிட்டனர்).

குட்கா புகழ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் இந்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு பொறுப்பாம். அவர் பாஜ வேட்பாளரை வெற்றி பெற வைப்பதாக சபதம் எடுத்துள்ளாராம். அவரும், எச்.ராஜா உள்ளிட்டோரும் ஓட்டு கேட்டு வந்தால், இந்த மருத்துவ சீர்கேடு, குட்கா ஊழல், ரபேல் ஊழல் எல்லாம் நமக்கு ஞாபகம் வர வேண்டும். இப்போது தேர்தலுக்காக அடிக்கடி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகிறார். 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளித்த மோடி எதுவுமே செய்யவில்லை. வாயால் வடை சுடுபவர் மோடி. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவே 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள், தமிழகத்தில் 11 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் என அறிவித்து இதுவரை ஒன்றை கூட அமைக்கவில்லை. ஆனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, விவசாய கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுகவும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. நாங்களும் ஆதரித்தோம். ஆனால் மசோதா எங்களுக்கு வந்து சேரவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பதவியை காப்பாற்றிக்கொள்ள பலமுறை டெல்லி செல்லும் எடப்பாடியும், அமைச்சர்களும் நீட் தேர்வு ரத்திற்காக என்ன செய்தனர்? நீட் தேர்வை ரத்து செய்வோம் என தற்போது கூற உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாக்கு சேகரிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை அழகர்கோவில் சாலையில் நேற்று காலை நடைபயணம் சென்றார். இப்படியே, மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு ஒவ்வொரு கடைக்கும் சென்று வாக்கு சேகரித்தார். திடீரென அவரை பார்த்த மகிழ்ச்சியில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். அவருக்கு கை குலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதன்பிறகு மார்க்கெட்டிலுள்ள கேன்டீனுக்கு சென்றார். அங்கு அவருக்கு வடையை தந்தபோது, ‘‘வடை வேண்டாம். வாங்க எல்லோரும் டீ சாப்பிடுவோம்’’ என்றபடி டீ சாப்பிட்டார். பின்னர் பழ மார்க்கெட்டிற்கும் சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உடன் சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: