ராணா 63, உத்தப்பா 67*, ரஸ்ஸல் 48 ரன் விளாசல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி

கொல்கத்தா: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், நைட் ரைடர்ஸ் 28 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. கொல்கத்தா தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர். அறிமுக ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி வீசிய 2வது ஓவரில் சுனில் நரைன் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். அந்த ஓவரில் மட்டுமே 25 ரன் கிடைத்தது. கிறிஸ் லின் 10 ரன் எடுத்து ஷமி வேகத்தில் மில்லர் வசம் பிடிபட்டார். நரைன் 24 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வில்ஜோயன் பந்துவீச்சில் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா - நிதிஷ் ராணா ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 110 ரன் சேர்த்து அசத்தியது. ராணா 63 ரன் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி வருண் சுழலில் அகர்வாலிடம் பிடிபட்டார். அடுத்து உத்தப்பாவுடன் இணைந்த ஆந்த்ரே ரஸ்ஸலும் சிக்சர்களாகத் தூக்க, கொல்கத்தா ஸ்கோர் 200 ரன்னை தாண்டியது.

ரஸ்ஸல் 48 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது. உத்தப்பா 67 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. டேவிட் மில்லர் அதிகபட்சமாக 59 ரன் விளாசினார். அகர்வால் 58 ரன், மந்தீப் சிங் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: