விதிமுறை மீறி பிரசாரம், பணம் பட்டுவாடா எடப்பாடி பழனிசாமி மீது பறக்கும்படையினர் புகார்: வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம்

வாழப்பாடி: சேலம்  மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் விதிகளை மீறியதாக பறக்கும் படையினர், போலீசில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையத்தில் கடந்த 22ம்தேதி, அதிமுக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுதிஷை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனத்தில் வந்ததாக ஏத்தாப்பூர் போலீசாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல், அன்றைய தினம் சேலம் கருமந்துறையில் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டத்தில்,  பணம் பட்டுவாடா செய்ததாக படத்துடன் செய்திகள் வெளியானது. இதுகுறித்து தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு பறக்கும் படையை சேர்ந்த பூபதிராஜா, கருமந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து கருமந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 22ம்தேதி சேலம் அயோத்தியாப்பட்டணம் ரவுண்டானா அருகில் பகல் 1 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, டெம்போக்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பறக்கும் படை அதிகாரிகள், அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக தேர்தல் விதிமீறல் தொடர்பாக  புகார் வந்தவுடனே போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பார்கள்.  ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதால்,  போலீசார் வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? அல்லது ஆட்களை அழைத்து வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்பி தீபா கனிக்கரிடம் கேட்டபோது, ‘‘கருமந்துறையில் முதல்வர் பங்கேற்ற பிரசார கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பறக்கும் படையினர் புகார் தெரிவித்துள்ளனர். அப்புகாரின் பேரில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: