அருணாச்சல பிரதேச சர்ச்சை 30,000 உலக வரைபடங்களை சீன அதிகாரிகள் அழித்தனர்

பீஜிங்: அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டாமலும், தைவானை தனி நாடாகவும் காட்டும் 30 ஆயிரம் உலக வரைபடங்களை தவறானவை என கூறி சீன அரசு அழித்துள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒருபகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதனால், இந்திய தலைவர்கள் அங்கு செல்லும் போதெல்லாம் சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இம்மாநில எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், சீனாவும் இதுவரை 21 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. தைவானிடம் இருந்து பிரிந்த தீவையும் சீனா தன்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறது.

இந்நிலையில், சீனாவின் ஷாங்டோங் மாகாணத்தில் குயிங்டோ நகரில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக உலக வரைபடங்கள் அச்சடித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை சீன சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அருணாச்சல பிரதேசத்தை சீனாவுடன் இணைக்காமல் இந்திய-சீன எல்லையை தவறாக சித்தரித்துள்ளதாகவும் தைவானை தனி நாடாகவும் காட்டும் இந்த வரைபடங்கள் அனைத்தும் தவறானவை என்று கூறிய அதிகாரிகள், அவை அனைத்தையும் அழித்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்டத் துறை பேராசிரியர் லியு வெங்சோங் கூறுகையில், ``வரைபட விவகாரத்தில் சீன அரசு சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனென்றால் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை, இன்றியமையாதது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தைவானும், தெற்கு திபெத்தும் சீன எல்லைக்குட்பட்டவை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: