பெரம்பலூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுப்பு!

பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் செந்தில்குமாரின் வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த இரு தேர்தல்களிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான முழு வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வரிசையாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். கடந்த வாரம் தமிழகத்தில் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து டோக்கன் வழங்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலதாமதமாக வந்துள்ளார்.

இவர் 3.20 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. செந்தில்குமார் காலதாமதமாக வந்த காரணத்தால் போலீசார் இவரை அலுவலகத்திற்குள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் செந்தில்குமார் மற்றும் அவரின் ஆதவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், செந்தில்குமார் தாமதமாக வந்ததை காரணம் காட்டி, அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் சரியாக இல்லை எனவும் தேர்தல் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், தாங்கள் டோக்கன் பெற்று காத்திருந்த போதிலும் முன்னதாக வந்த வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் தாமதம் செய்ததால், செந்தில்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து செய்வதறியாது செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திணறி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: