மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு ஏடிஎஸ்பிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் கடமை தவறிய ஏடிஎஸ்பிக்கு ஒரு பிரிவில் 4 ஆண்டு, மற்றொரு பிரிவில் ஒரு  ஆண்டு என சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. அந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும்  உத்தரவிட்டுள்ளது. மதுரையில் கடந்த 2007, மே 9ம் தேதி தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தில்  ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 17 பேர் கைது  செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பிலும்,  ஊழியர் தரப்பிலும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் பி.எஸ்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அமர்வில் நடந்து வந்தது. கடந்த 21ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில், ‘‘இவ்வழக்கில் குற்றவாளிகளான அட்டாக் பாண்டி, ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டியன், சுதாகர்,  திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 3 மாதத்தில்  தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், இவ்வழக்கில் 17வது எதிரியான டிஎஸ்பி ராஜாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கான  தண்டனை மார்ச் 25ல் அறிவிக்கப்படும்’’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் தொடர்புடைய ராஜாராம் (தற்போது ஏடிஎஸ்பியாக பதவி  உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளார்) நேற்று காலை ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதிகள் அவரிடம், ‘‘போலீஸ் அதிகாரியான நீங்கள் நினைத்திருந்தால், இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். அந்த இடத்தில் உங்கள் குழந்தைகள்  இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்’’ என்று கூறினர். அதற்கு ராஜாராம், ‘‘சம்பவ  இடத்தில் நான் இல்லை. அங்கு நான் இருந்திருந்தால் நிச்சயம் தடுக்க முயற்சி செய்திருப்பேன்’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘சம்பவ இடத்தில்  நீங்கள் இருந்தீர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்பவத்தை தடுக்கவேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் நினைத்திருந்தால்  குறைந்தபட்சம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கலாம். உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை. அதனால் உங்களை இந்த நீதிமன்றம்  குற்றவாளியாக கருதுகிறது. இதுகுறித்து ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

 ராஜாராம் கூறுகையில், ‘‘எனக்கு 62 வயதாகிறது. பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறேன். எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு,  குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று கோரினார். இதனையடுத்து நீதிபதிகள், ‘‘இவ்வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பதால் 217வது  சட்டப்பிரிவின்படி (பொது ஊழியராக இருந்து கொண்டு சட்டத்திற்கு கீழ்ப்படியாத நபர்களை காப்பாற்றுதல்) உங்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை,  221வது சட்டப்பிரிவின் கீழ் (குற்றவாளிகளை உள்நோக்கத்துடன் தப்பிக்க விடுதல்) 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது. இரண்டையும்  ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து ராஜாராம், நேற்று மாலை மதுரை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: