‘100 ஆண்டு கடந்தும் தொடர்கிறது’ கள்ளந்திரியில் மீன்பிடி திருவிழா

மதுரை: மதுரை அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பல ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி ‘மீன்பிடி திருவிழா’ நடத்தினர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ளது கள்ளந்திரி. இக்கிராமத்தில் ஸ்ரீ ஐந்து கோயில் முத்தன்கோயிலுக்கான பெரிய கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களின்போது பிரம்மாண்ட மீன்பிடி திருவிழா நடக்கும். இதன்படி இன்று காலை இக்கிராமத்தில் அதிகாலையில் ஸ்ரீ ஐந்து கோயில் முத்தன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.  காலை 6.40 மணிளக்கு, கிராமத்தின் அம்பலக்காரர்கள் துண்டு வீசி கொடி காட்டியதும் மீன் பிடித்திருவிழா துவங்கியது. ஐந்து ஊர்க்காரர்கள் மட்டுமல்லாது சுற்றிலும் உள்ள கிராமத்து மக்களும், தங்கள் உறவினர் வீடுகளிலும், கண்மாய்க்கரையிலும் நேற்றே வந்து இரவு முழுக்க தங்கியிருந்தனர். இவர்கள் ஒரு சேர இன்று காலை கண்மாய்க்குள் இறங்கி மீன் பிடித்தனர். கைகளில் வலை, கச்சா, பானை பிரி மட்டுமல்லாது சேலை, வேஷ்டி துணி வரை விரித்து மீன் பிடித்தனர்.

கூட்டம் கூட்டமாக நின்றபடி மீன்பிடித்த பல ஆயிரக்கணக்ககானோரின் கரங்களில், சிறிய மீன்கள் துவங்கி பெரிய மீன்கள் வரை சிக்கியது. குறவை, கெழுத்தி, கெண்டை, அயிரை, ஜிலேபி.. மீன்களுடன் விரால் மீன்களும் வலையிலும், கையிலும் சிக்கியது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘இந்த மீன்பிடித் திருவிழா, 30க்கும் அதிக கிராமங்களின் ஒற்றுமைத் திருவிழாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. எந்த நாளும் இந்த கண்மாயில் மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. இந்த ஒருநாளில் எவரும் இங்கு மீன்பிடித்துக் கொள்ளலாம். உறவுகள் ஒன்று கூடும் ஓர் ஒப்பற்ற பெருவிழாவாகவும் இந்த மீன்பிடி திருவிழா, நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: