வேல்ஸ் கல்விக்குழுமம் ரூ.300 கோடி வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிப்பு : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

சென்னை : வேல்ஸ் கல்விக்குழுமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெற்ற வருமான வரிச்சோதனையில், சுமார் 300 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கல்விக்குழுமத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு முழுவதும் வேல்ஸ் கல்விக்குழும தலைவர் ஐசரி கணேஷிடன் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளரும், பல கல்வி நிலையங்களின் அதிபருமான ஐசரி கணேஷ் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.o திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி என்ற படத்தையும் தயாரித்திருந்தார். அந்த படமும் வசூலை அள்ளியது. இந்நிலையில் வருமான வரி ஏய்ப்பு புகாரில், ஐசரி கணேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமாக பல்லாவரம், தாழம்பூர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இது தவிர, தெலங்கானா மாநிலம் நிசாமாபாத், விகாரா பாத் ஆகிய இடங்களில் பல்வேறு கல்வி நிலையங்களிலும் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் மொத்தம் 30 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் அதிகாரிகள் குழுவாக சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள ஐசரி கணேஷ் வீடு, சேத்துப்பட்டுவில் உள்ள ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே பல பகுதிகளில் சோதனை நீடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வேல்ஸ் குழும தலைவர் ஐசரி கணேஷிடம் பெற்ற வாக்குமூலத்தில் பதிவி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரம் என்பதால் வரி செலுத்தாத நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: