பல்கலை மாணவரை எதிர்த்து மத்திய அமைச்சர் போட்டி

கடந்த 2016 ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பியதாக அப்போதைய மாணவர்கள் சங்க தலைவர் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத்திய அரசு தலையீடு உள்ளதாக கூறி நாடு முழுவதும் இப்பிரச்னை எதிரொலித்தது. இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரான கன்னையா குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். பீகார் மாநிலத்தின் பெகுசராய் தொகுதியானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதியாக அறியப்படுகிறது. இதனால், பெகுசராயில் கன்னையா குமார் போட்டியிடுவது உறுதியானது. ஆனால், கடந்த முறை இதே தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு சிறிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த தன்வீர் ஹாசன் இந்த தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விரும்புகிறார்.

பாஜ.வுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை உள்ளன. தன்வீர் ஹாசன் மற்றும் கன்னையா குமார் ஆகிய இருவருமே பெகுசாராய் தொகுதியைச் சேர்ந்தவர்கள்தான். கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில் பெகுசாராய் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க லாலு மகன் தேஜஸ்வி முடிவு செய்துள்ளார். பெகுசாராய் தொகுதியில் கன்னையா குமார் போட்டியிடுவது உறுதி என்றதும் அவர் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். அவரை வீழ்த்துவதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பாஜ வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆனால், நவடா தொகுதியில் இருந்து கடந்த முறை வென்ற தன்னை பெகுசாராய்க்கு தற்போது மாற்றியது கிரிராஜ் சிங்கை அதிருப்தி அடைந்துள்ளார். எனினும், கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அவர் பெகுசாராயில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: