முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோவிலம்பாக்கம் வாலிபர் கைது

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது ெசய்தனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பு வளாகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அப்பகுதியில் வசித்து வருவதால் எப்போதும் கிரீன்வேஸ் சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், நேற்று காலை 5.51 மணி அளவில் எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனே இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி அபிராமபுரம் போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர்.

30 நிமிடங்கள் வரை நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. பின்னர் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் 73582 85129 எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை கோவிலம்பாக்கம்  சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியை ேசர்ந்த சுந்தராஜ் (23) என்பவருக்கு சொந்தமான எண் என தெரியவந்தது. போலீசார் சுந்தராஜை பிடித்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது மனநலம் பாதிக்கப்பட்டு ஏற்கனவே கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என தெரியவந்தது. இருந்தாலும் சுந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: