போரூர் அருகே ஏடிஎம் பணம் 10 லட்சம் கொள்ளை கல்லூரி மாணவி, 2 நைஜீரியர்கள் கைது: செல்போன் மூலம் சிக்கினர்

சென்னை: போரூர் அருகே ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு வந்த 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் 2 நைஜீரிய வாலிபர்களை கைது செய்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கிகளிலிருந்து பணத்தை பெற்று அதனை ஏடிஎம்களில் நிரப்பும் தனியார் எஜென்சி நிறுவனம் சென்னை வடபழனியில் இயங்கி வருகிறது. கடந்த பிப்.7ம் தேதி இந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் தேவராஜ் (38), முரளி (29) ஆகிய இருவரும் ஒரு வேனில் 35 லட்சத்தை எடுத்துக்கொண்டு வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 ஏடிஎம் இயந்திரங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை நிரப்பினர்.  மீதமுள்ள 14 லட்சத்துடன் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே உள்ள நூம்பல் மூவேந்தர் நகருக்கு மாலை 6 மணி அளவில் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ₹4 லட்சத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு அந்த ஏடிஎம்மிற்குள் நுழைந்த மர்ம நபர், பணத்தை நிரப்பிக் கொண்டிருந்த தேவராஜை சிறிய கோடாரியால் வெட்டி பணத்தை பறிக்க முயன்றார். தடுக்க முயன்ற முரளியையும் வெட்ட முயன்றுள்ளார்.  பின்னர் தேவராஜிடம் இருந்த 10 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்த அந்த மர்ம நபர், தயாராக பைக்கில் இருந்த மற்றொரு நபருடன் தப்பினார். இதுபற்றி அருகிலிருந்த போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், சம்பவம் நடந்த பகுதி மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மதுரவாயல் போலீசார் வந்தனர்.  காயமடைந்த தேவராஜுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்த ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள், கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் பெற்று ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள் மோட்டார் பைக் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் போல உடையணிந்து  கொண்டு முகத்தை மூடி இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து  சம்பவம் நடந்த நேரத்தின்போது அருகிலிருந்த செல்போன் டவர் வழியாக அந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு குறிப்பிட்ட எண் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து டவர் லொகேஷனை வைத்து விசாரணை செய்தபோது குறிப்பிட்ட அந்த எண் மட்டும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அதே செல்போனில் வேறு சிம்கார்டை பயன்படுத்தி பேசியிருப்பது தெரிய வந்தது. அந்த செல்போன் சிக்னலை வைத்து அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. மூலம் போலீசார் விசாரணை செய்தனர்.  அதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த அக்யோமாயே (27), அமூ (26), ஆகிய 2 பேர், அந்த செல்போனை பயன்படுத்தியது தெரிந்தது. இதனை அடுத்து சென்னையில் பதுங்கியிருந்த அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  இதில் கைது செய்யப்பட்டுள்ள  ஒருவர் மீது கஞ்சா வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில்  தொடர்புடைய கல்லூரி மாணவி ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூர், பெங்களூருக்கு விரைந்தது தனிப்படை

இந்த கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளிகள் பெங்களூரு மற்றும் மைசூரில் பதுங்கி இருப்பதாகவும் அவர்களை பிடிக்க ஒரு தனிப்படையினர் மைசூர், பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் பிடிபட்டவுடன் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியது எப்படி, கொள்ளை அடித்த பணத்தை என்ன செய்தார்கள்?  என்பது போன்ற தகவல்கள் தெரியவரும். மேலும் இந்த கொள்ளை கும்பலுக்கு சர்வதேச அளவில் தொடர்புகள் உள்ளனவா, இதே போல வேறு பகுதிகளில் கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: