ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா வெட்டிக்கொலை

திருமலை: ஆந்திராவில் எதிர்க்கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமான விவேகானந்த ரெட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டி (68). இவர், கடப்பா மாவட்டம், புலிவெந்துலாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விவேகானந்தரெட்டி கடந்த 1989 மற்றும் 94ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணிபுரிந்துள்ளார். இவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான விஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார். இரண்டு முறை கடப்பா எம்பியாகவும்  பணிபுரிந்த விவேகானந்த ரெட்டி தற்போது நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கட்சி பணிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன்  இணைந்து மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு வந்த விவேகானந்த ரெட்டி, இரவு பொதட்டூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை விவேகானந்தரெட்டி தனது வீட்டு கழிவறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து விவேகானந்த ரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி புலிவெந்துலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், விவேகானந்த ரெட்டி கழிவறையில் தலை மற்றும் காலில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விவேகானந்த ரெட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவேகானந்த ரெட்டி உடலில் 7 இடங்களில் சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாக டாக்டர்கள்  தெரிவித்தனர். இதற்கிடையே அவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க கடப்பா போலீசார் 5 சிறப்பு படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திராவில்  அரசியல், செல்வாக்கு, பணபலம் உட்பட அனைத்திலும் முதன்மை பெற்ற ஒரு முக்கிய குடும்பத்தை சேர்ந்த நபர் தேர்தல் நேரத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடப்பா மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தனி குழு விசாரணை

இதுகுறித்து அமைச்சர் ஆதி நாராயண ரெட்டி கூறியதாவது: விவேகானந்த ரெட்டி மாரடைப்பில் இறந்ததாக முதலில் அவரது குடும்பத்தினர் கூறி வந்த நிலையில் அங்கு கிடைத்த தடயங்களை வைத்து பார்க்கும்போது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. ஏற்கனவே எம்.பி. பதவி பெறுவதற்காக முன்னாள் எம்.பி. அவிநாஷ் ரெட்டிக்கும் விவேகானந்த ரெட்டிக்கும் இடையே விவாதங்கள் இருந்து வந்தது. மேலும், ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்தினர் மத்தியிலும் விவேகானந்த ரெட்டிக்கு  விவாதங்கள் இருந்தது.இந்நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சந்திரபாபு நாயுடு மீதும் என் மீதும், அமைச்சர்  லோகேஷ், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதீஷ்ரெட்டி மீதும் பழி சுமத்துவது தவறை மறைக்கும் செயல். கொலை குறித்து எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ஏற்கனவே முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து விசாரணை செய்வதற்காக தனி விசாரணை குழுவை அமைத்துள்ளார். யாராக இருந்தாலும் இந்த கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தி அவர்களை தூக்கிலிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: