சென்னை: மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்ெபற்றுள்ளது. அந்த கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில கவுரவ ஆலோசகரும், எஸ்.டி. கூரியர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமான கே.நவாஸ்கனி வேட்பாளராக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர், ராமநாதபுரம் மாவட்டம் குருவாடியை சேர்ந்தவர். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ‘ஏணி’ சின்னத்தில் கே.நவாஸ்கனி போட்டியிடுவார் என்று தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.