பழுதான விவி பேட் இயந்திரத்தை வைத்து விழிப்புணர்வு பிரசாரம் : ஆர்வத்துடன் வந்த மக்கள் அதிருப்தி

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பழுதான விவி பேட் இயந்திரத்தை வைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவி பேட் இயந்திரத்தை பயன்படுத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து தொகுதியிலும், வாக்குச்சாவடிகளில் இந்த விவி பேட் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உறுதிபடுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்முறை விளக்க முகாம் நடக்கிறது. இதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் விவி பேட் இயந்திர பயன்பாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் வந்து செல்லும் நுழைவு வாயில் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திர விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவி பேட் ஆகிய மூன்றையும் வைத்து, எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்கை பதிவு செய்தவுடன் விவி பேட் இயந்திரத்தில் சின்னம் வருவது தொடர்பாகவும் ஊழியர் விளக்கமளித்து வருகிறார். அந்த மையத்தில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேட் ஆகியவை நேற்று காலை இயங்கவில்லை. பழுதடைந்த இயந்திரங்களை வைத்துக்கொண்டு, விளக்கம் கேட்டு வரும் மக்களிடம் என்ன சொல்வதென்று அறியாமல் ஊழியர் திணறினார். இயந்திரம் பழுதாகிவிட்டது என்றும் பலரிடம் பதிலளித்து வந்தார். இதை கேட்டு, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுபற்றிய தகவல் கலெக்டர் ரோகிணியின் கவனத்திற்கு சென்றது. உடனே அவர், இயந்திரங்களை மாற்றி உரியமுறையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என தேர்தல்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் தேர்தல்பிரிவு அதிகாரிகள், பழுதடைந்த இயந்திரங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர். அதன்பின் அந்த மையம், செயல்படவில்லை. இதனால்  விழிப்புணர்வு மையம் வெறிசோடி காணப்பட்டது. மக்களும் ஏமாற்றத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: