ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசி தீவிரவாதி தாக்குதல்: ஒருவர் பலி; 32 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 32 பேர் காயமடைந்தனர். புல்வாமாதாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், தீவிரவாதிகள் வேட்டையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. ஏராளமான தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்று வருகின்றன. இந்நிலையில், ஜம்முவில் தீவிரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். ஜம்மு பேருந்து நிலையத்தில் நேற்றும் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால், பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தது. அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென பொதுமக்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில், அப்பாவி மக்கள் 32 பேர் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து ஒன்றும் சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இவர் உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவார் பகுதியை சேர்ந்த முகமது ஷாரிக் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் தேடி வருகின்றன. பாதுகாப்பு மிகுந்த பேருந்து நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது, மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: