திருப்பதியில் பரபரப்பு: 9 தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கியது

திருமலை: திருப்பதியில் உள்ள 9 தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித்துறையினர் 2 நாட்களாக நடத்திய அதிரடிச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திருப்பதியில் ரெட்டி அண்டு ரெட்டி காலனி, பைபாஸ்  சாலை, குருவாரெட்டி நினைவு மண்டபம், அலிபிரி சாலை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும்  9 தனியார் மருத்துவமனைகளில் கடந்த 19ம் தேதி நள்ளிரவு முதல் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதில் விஜயவாடாவில் உள்ள வருமான வரித்துறை கூடுதல் ஆணையர்  மல்லிகா அர்ஜூனா தலைமையில் 50 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள், சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மருத்துவமனையில் உள்ள மருந்தகம், பில் கவுன்டர் உட்பட அறைகளில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தனர். 19ம் தேதி இரவு தொடங்கிய சோதனை நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த ஆவணங்களை ஆய்வு செய்து, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2 நாட்களாக நடந்த இந்த அதிரடி சோதனை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: