சேடப்பட்டி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியருக்கு அடி, உதை

பேரையூர்: மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பகுதிநேர கணினி ஆசிரியராக பேரையூரை சேர்ந்த இதயதுல்லா (36) பணியாற்றி வருகிறார். இவர் தங்களுக்கு  பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், வெளியில் சொன்னால் பள்ளியை விட்டு விரட்டி விடுவேன் என மிரட்டி வருவதாகவும் தலைமையாசிரியை  பரமேஸ்வரியிடம், மாணவிகள் புகார் தெரிவித்தனர்.ஆனால், தலைமையாசிரியை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள், பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.  கொதிப்படைந்த பெற்றோர், பொதுமக்கள் இதயதுல்லாவை  கைது செய்யக்கோரியும், தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக்கோரியும் நேற்று காலை 9  மணியளவில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த பேரையூர் போலீசார், ஆசிரியர் இதயதுல்லா மற்றும் பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

தொடர்ந்து உசிலம்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி முத்தையா தலைமையில் பெற்றோர்கள், பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதிலும்  உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து இதயதுல்லாவை சேடபட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல போலீசார் வாகனத்தில் ஏற்றினர். உடனே,  பெற்றோர்கள், பொதுமக்கள் வாகனத்தை எடுக்க விடாமல் முற்றுகையிட்டு ஆசிரியரை தாக்க முயற்சித்தனர். சுதாரித்த போலீசார், மீண்டும் பள்ளி  வகுப்பறைக்குள் ஆசிரியர் இதயதுல்லாவை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.பதற்றம் அதிகரித்ததால் பள்ளி அருகே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பாதுகாப்புடன் இதயதுல்லாவை  காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றபோது,  பொதுமக்கள் போலீஸ் கூட்டத்திற்குள் புகுந்து ஆசிரியரை அடித்து உதைத்தனர். ேபாலீசார் அவரை மீட்டு சேடபட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.  கல்வி மாவட்ட அதிகாரி முத்தையா கூறும்போது, ‘‘இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: