வாக்குகளை பறிப்பதற்கு செய்யும் மலிவான தந்திரம்: கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

சிலநாட்களுக்கு முன்பு மத்திய பாஜ அரசு விவசாயிகளுக்கு 3 தவணையாக ரூ.6,000 தருவதாக அறிவித்தது. தமிழக அரசும், 62 லட்சம் பேருக்கு, வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு, ரூ.2,000 என்று அறிவித்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போல் அரசு பணத்தை எடுத்து தொகையாக கொடுப்பது ஒருவகையில் வாக்குகளை பறிக்கும் முயற்சி. அதிமுகவை சேர்ந்தவர்களை பட்டியலில் சேர்த்து, வருவாய்துறை அதிகாரிகளை வைத்துக்கொண்டு அரசு பணத்தை விநியோகிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன் இவற்றையெல்லாம் தள்ளுபடி செய்து விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, இதுபோன்ற மலிவான திட்டங்களை அதிமுக அரசும், பாஜவும் நிறைவேற்றுகிறது. தற்போது தமிழகத்தில் திவாலான நிலையில் இருக்கும் தமிழக அரசு. கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி கடன் வைத்திருக்கும் அரசு எந்த நல்ல திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

மக்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், தொழில் வளர வேண்டும். மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். விலைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. மாறாக மக்களுக்கு பணமாக கொடுப்பது என்பது அவர்களிடம் இருக்கும் வாக்குகளை பறிப்பதற்கான ஒரு மலிவான முயற்சி. மக்களுக்கு பணம் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த பணத்தை கொடுக்கும் அதிமுக அரசின் நோக்கம் என்ன? தேர்தலில்  அவர்களது வாக்குகளை பெறுவதற்கு ஒரு தற்காலிகமான ஏற்பாடாகத்தான் தமிழக அரசு இதைச்செய்கிறது. 4 ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிக்கொண்டு இருந்து விட்டு, தேர்தல் நெருங்கும் போது மக்களுக்கு தொகையாக கொடுக்கிறது.

பொங்கல் பண்டிகையின்போது கொடுப்பது, இலவச வேட்டி, சேலை கொடுப்பது என்பது வேறு விஷயம். இதெல்லாம் நலத்திட்டங்கள். சைக்கிள், மடிக்கணினி கொடுப்பதும் நலத்திட்டங்கள். ஏதோ ஒருவகையில் பொருளாக கொடுக்கிறீர்கள். பணமாக கொடுப்பது என்பது, அவர்களிடமிருக்கிற வாக்குகளை பறிக்கிற ஒரு மலிவான தந்திரம்.

தமிழக மக்கள் இதற்கு ஏமாற மாட்டார்கள். வாக்குகளுக்காக ரூ.2,000 கொடுப்பது வாக்காளர்களை அவமதிக்கும் செயல். 23 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். மீதி இருக்கிறவர்களை, வருவாய் துறை அதிகாரிகளையும், கிராம நிர்வாக அலுவலர்களையும் வைத்துக்கொண்டு அதிமுகவினருக்கு கொடுப்பார்கள். அதை யார் தடுக்க முடியும். பட்டியலை வெளிப்படையாக வெளியிடுவார்களா? அந்த பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும். அதையெல்லாம் வெளியிட மாட்டார்கள்.  ஒரு கோடி வேலையில்லா பட்டதாரிகள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருக்கிறார்கள். அவர்கள் வேலை பெறுவதற்கு அதிமுக அரசு எடுத்த முயற்சி என்ன? அதேபோல் ஆண்டுக்கு, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக சொன்ன பாஜ அரசு எடுத்த முயற்சி என்ன? மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டன. அதனால் வரும் தேர்தலில் நாடு முழுவதும் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: