ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு: 1.92 லட்சம் பறிமுதல் ,9 பேர் மீது வழக்குப்பதிவு

ராசிபுரம்: ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு  போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 92 ஆயிரம்  சிக்கியது. நாமக்கல்  மாவட்டம், ராசிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், நேற்று  மதியம் 1 மணியளவில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார்  தலைமையில், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்பட 10 போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகஆனந்த் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை  நடத்தினர். இந்த சோதனையின் போது, ஆய்வாளர் சண்முகஆனந்த் அறையில் கணக்கில் வராத 10 ஆயிரம் சிக்கியது. அதேபோல், அங்கிருந்த இடைத்தரகர்களிடம் 1 லட்சத்து 82 ஆயிரம் கணக்கில் வராத பணம்  இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு  போலீசார், தொடர்ந்து மோட்டார் வாகன  ஆய்வாளர் சண்முகஆனந்த், அலுவலக ஊழியர் சக்தி மற்றும் 6 இடைத்தரகர்கள்  உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 நாமக்கல்லில்  தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன், லஞ்ச  ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, லட்சக்கணக்கில் கணக்கில் வராத  பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதே போல், நாமக்கல் கலெக்டர் அலுவலக  பின்புறம் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் மட்டும்  2 முறை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். தற்போது ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை  நடந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: