பாளையில் இன்று அதிகாலை சம்பவம்.. விபத்தில் சிக்கியவரை மீட்டு உயிர் பிழைக்க வைத்த மனிதநேயம்: அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பாராட்டு

நெல்லை: பாளையில் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு அரசு பஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் டிரைவர் கொண்டு சென்றதால் அந்த நபர் உயிர் பிழைத்தார். உருக்கமான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: பாளையங்கோட்டை கேடிசி நகரில் அரசு பஸ் டெப்போ உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 4.45 மணிமுதல் பஸ்கள் டெப்போவில் இருந்து புறப்பட்டு செல்ல தொடங்கிவிடும். இதுபோல் இன்று அதிகாலை பஸ்கள் புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக சந்திப்பு மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு புறப்பட்டு வந்த வண்ணம் இருந்தன. அதிகாலை 5.15 மணியளவில் கேடிசிநகர் சீனிவாசநகர் ரவுண்டானாவில் ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடப்பதை பஸ் டிரைவர் பார்த்துவிட்டார். உடனடியாக அவர் பஸ்சை நிறுத்தியதோடு, பின்னால் வந்த பஸ்களும் என்னமோ ஏதோ என்று தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் அருகில் ஒரு டீக்கடை மட்டும் இருந்தது. ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லை. வரிசையாக நிறுத்தப்பட்ட பஸ்களில் இருந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் திபு திபுவென இறங்கி வந்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகளும் வந்தனர்.

விபத்தில் சிக்கி கிடந்தவர் ஓட்டி வந்த சைக்கிள் அருகில் நொறுங்கி கிடந்தது. அந்த நபர் அதன் அருகில் மூச்சி பேச்சின்றி கிடந்தார். அய்யோ.. அடிபட்டவர் யாரென்று தெரியவில்லையே... உயிர் இருக்கிறதா, இல்லையா என பயணிகள் கவலைப்பட்டனர். உடனடியாக டிரைவர், கண்டக்டர் அந்த நபரை புரட்டி போட்டு எதுவும் அடிபட்டுள்ளதா என பார்த்தனர். அப்போதுதான் தெரியவந்தது. அவர் மயங்கிய நிலையில் கிடப்பது. சுவாசம் இருந்ததால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டிரைவர் ஒருவர் போன் செய்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு டிரைவர், தம்பி... 108 ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்கவேண்டாம். நம்ம பஸ்சிலே தூக்கி போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விடுவோம். முதலில் அவர் உயிரை காப்பாற்றுவோம் என்றார். அவர் சொல்வது சரி என்று படவே டிரைவர், கண்டக்டர்கள் அந்த நபரை அரசு பஸ்சில் மிகவும் சிரமப்பட்டு ஏற்றினார்கள். அங்குள்ள சீட்டில் அவரை படுக்கவைத்தனர். அவர் சீட்டில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக இரண்டுபேர் தாங்கிபிடித்தனர். பஸ் ஐகிரவுண்டை நோக்கி விரைந்தது. அதன்பிறகுதான் பின்னால் அணிவகுத்து நின்ற மற்ற பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.

ஆனால் பஸ் கண்டக்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய நபரை ஏற்றிச்சென்ற பஸ் கண்டக்டருடன் தொடர்ந்து போனில் பேசி, அவர் நிலைமை எப்படி உள்ளது? என்று கேட்டபடி இருந்தார். இதுபோல் பஸ்சில் வந்த பயணிகளும் அடிபட்ட நபர் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். 15 நிமிடம் இருக்கும். விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்ததால் அவர் மூர்ச்சை தெளிந்துள்ளார். இனி அவர் உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர் என கண்டக்டர் சக கண்டருக்கு போனில் தெரிவிக்கவே... அப்பாடா கெட்ட நேரத்திலும் அந்த மனுஷனுக்கு நல்லநேரம். பிழைத்துக்கொண்டாரே அது போதும் என்று கண்டக்டர் மட்டுமின்றி பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விபத்தில் சிக்கிய அந்த நபருக்கு 47 வயதிருக்கும். சைக்கிளில் தினமும் வாக்கிங் செல்பவர்போல் தெரிகிறது. இன்று காலையில் அவர் சீனிவாசநகர் ரவுண்டானாவில் ரோட்டை கடக்கும்போது ஏதோ ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. அவர் ஓட்டி வந்த சைக்கிள் மட்டும் சேதமாகிவிட்டதே தவிர அவருக்கு பெரிய அளவில் அடிபடவில்லை. உடனடியாக அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் துரிதமாக செயல்பட்டதால் அவர் பிழைத்துக்கொண்டார்.

பொதுவாக விபத்தில் சிக்குபவர்களை நல்ல எண்ணத்தில் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தாலும் அது போலீஸ் கேஸ் ஆகிவிடும். சேர்த்தவர் பற்றி விசாரணை நடக்கும். அவர் எப்படி சிக்கினார் என போலீசார் துளைத்து எடுத்து விடுவார்கள். இதுபோன்ற பல விதிமுறைகள் இருப்பதால்தான் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை. ஆனால் இன்று நடந்த சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களின் மனித நேயம் மிகவும் பாராட்டுக்குரியது. டெப்போவில் இருந்து பஸ்சை எடுத்துவிட்டால் அவர்கள் பணி முடியும் வரைக்குள் இத்தனை டிரிப் அடிக்கவேண்டும் என்று இருக்கும். டிரிப் குறைந்தாலோ வசூல் குறைந்தாலோ டெப்போ மேலாளரிடம் அதற்கான விளக்கத்தை கொடுத்தாக வேண்டும். இன்று அரசு மருத்துவமனைவரை சென்ற பஸ் டிரைவர், கண்டக்டர்களின் நிலையும் அதுதான். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனித நேயத்துடன் செயல்பட்ட அவர்களை மனதார பாராட்டுவோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: