பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவானது, இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிறப்பு வாய்ந்த முருகன் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவிலின் சிறப்புகளை காக்கவும் எந்த நடவடிக்கையும் இல்லை.

திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழமைவாய்ந்த பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. இதையடுத்து, பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியது. மேலும், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை ஆணையர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பிப்.26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: