போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதை கணக்கில் கொண்டு, எந்த ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் கவுரவம் பார்க்காமல் பெருந்தன்மையுடன் வேலைநிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்ட  அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.இந்நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட 3,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தற்காலிக பணி  நீக்கம் செய்தும், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தும், 3000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை  பணியிட மாறுதல் செய்தும் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல்  செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது முதன்மைக் கல்வி அதிகாரிகளும் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு சிலருக்கு இடமாறுதல் வழங்கிய பின்,  பணியிடை நீக்கமும் செய்து வருகின்றனர்.  இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில் 50 சதவீதம் பேர் ஆசிரியைகளாவர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் போக்குடன்  தொடுத்துள்ள தற்காலிக பணி நீக்கம், பணியிடம் மாற்றம் போன்ற அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக  கைவிட வேண்டும். அவர்கள் பணியாற்றிய இடத்திலேயே மீண்டும் அவர்களை பணியில் அமர்த்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: