வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதாரம் சரிகிறது என்று எழும் விமர்சனங்களுக்கு இடையே, சரியவில்லை, வேகமாக வளருகிறது என்று சொல்கிறது சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) அமைப்பு. வாஷிங்டனில் ஐஎம்எப் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஒரு கணிப்பு அறிக்கை வெளியிடும். இப்போது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னணியில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, வரும் ஆண்டுகளில் இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி தொடர்ந்து வேகமாக அதிகரிக்கும். குறிப்பாக சொன்னால், சீனாவை விட முதன் முறையாக இந்தியா ெபாருளாதார வளர்ச்சியை காணும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்தாண்டு இது 7.7 சதவீதமாக உயரும். இந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி வேகத்தை விட, இந்தியா ஒரு சதவீதம் அதிகரித்து இருக்கும்.
இந்தியாவை ஒப்பிடும் போது, சீனாவின் பொருளாதார வளர்ச்சி தளர்ச்சியாக தான் உள்ளது. கடந்த 2017ல் 6.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி, கடந்தாண்டு 6.6 சதவீதமாக சரிந்தது. வரும் 2019 மற்றும் 2020ல் இதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2 ஆக வெகுவாக குறையும் என்று கணிக்கப்படுகிறது.