15 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வேயில் மீண்டும் மண் குவளை வருகிறது

புதுடெல்லி: ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக், பேப்பர் கப்களுக்கு குட்பை சொல்லிவிட்டு, 15 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மண் குவளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில் நிலையங்கள், ரயில்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார். ஆனால், காலப்போக்கில்  மண் குவளை பயன்பாடு மாறி, பிளாஸ்டிக், பேப்பர் கப் வந்து விட்டது. இந்த நிலையில், ரயில்வேயில் மண் குவளையை மீண்டும் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்டமாக உபி மாநிலத்தின் வாரணாசி, ரேபரேலி ஆகிய 2 ரயில்  நிலையங்களில் உடனடியாக மண்குவளையை பயன்பாட்டில் கொண்டு வர மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வடக்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வே மேலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால், காபி போன்ற தேநீர்கள்  ஆகியவை உள்ளூர் மண்பாண்ட உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட மண் குவளைகள், மண் தட்டுகளில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பது தடுக்கப்படுவதோடு, மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: