விராலிமலையில் உலக சாதனைக்கான ஜல்லிக்கட்டு...... 2000 காளைகள் பங்கேற்பு: முதல்வர் கொடியசைத்து துவக்கிவைத்தார்

விராலிமலை: உலக சாதனை முயற்சியாக விராலிமலையில் இன்று பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2,000 காளைகள் பங்கேற்றுள்ளன. போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். பொங்கலையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் உலக சாதனை முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் குளத்தில் ஸ்ரீபட்டமரத்தான் கருப்புசாமி கோயில் விழா கமிட்டி சார்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் வேறு எங்கும் பங்கு பெறாத வகையில் அதிகளவில் சுமார் 2,000 காளைகள் கலந்து கொண்டுள்ளன. 500 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க உள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருபுறமும் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்துக்கு வெளியே ஜல்லிக்கட்டை பார்வையிட 4 இடங்களில் பெரிய அளவில் எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பார்வையாளர்கள் சுமார் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை பார்வையிட உலக சாதனை கூட்டமைப்பில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மார்க், மெலன் ஆகியோர் வந்துள்ளனர். சிறந்த 3 காளைகளுக்கும், சிறந்த மாடு பிடி வீரர்கள் 3 பேருக்கும் கார், பைக்குகள் பரிசாக வழங்கப்பட உள்ளன. இதுதவிர 800க்கும் மேற்பட்ட சைக்கிள் மற்றும் பிரிட்ஜ், டிவி, மிக்ஸி, தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில் போன்ற பொருட்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன. விழாவையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: