சபரிமலையில் தரிசனம் செய்யும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சபரிமலை சன்னிதானம் செல்லும் பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை சென்ற கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. அதே நேரம், கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு, இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்து  வருகிறது.

Advertising
Advertising

இதையடுத்து, ஜனவரி 2ம் தேதி கேரளாவை சேர்ந்த கனக துர்கா (44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு அதிகாலையில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி  மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனக துர்கா சென்றபோது, ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததை கண்டித்து அவருடைய மாமியார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், கனகதுர்கா காயம் அடைந்தார்.  இதனையடுத்து கனகதுர்காவும் பிந்துவும் சபரிமலை தரிசனத்திற்கு பிறகு தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

நேற்று வக்கீல் இந்திரா ஜெய்சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் , `சபரிமலையில் அனைத்து பெண்களும் இடையூறு இன்றி தரிசனம் செய்யும் வகையில் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தரிசனம் செய்ய செல்லும் பெண்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிந்து, கனகதுர்கா ஆகியோருக்கு போதிய பாதுகாப்பு வழங்க கேரள காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல் கோயிலை தூய்மைப்படுத்த தடை விதிக்க கோரிய கனகதுர்காவின் மனு நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: