ஒரு மாத மீட்பு பணிக்குப் பிறகு மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய ஒருவர் சடலம் கண்டுபிடிப்பு: மற்ற 14 பேரும் கூட இறந்திருக்க வாய்ப்பு

புதுடெல்லி:  மேகாலயாவில் ஒரு மாதமாக நடந்த மீட்பு பணிக்குப் பிறகு, சுரங்கத்தில் சிக்கிய 15 பேரில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலம், ஜெயின்சியா மாவட்டத்தில் உள்ள ஆற்றின் அருகே, சட்ட விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் கடந்த டிசம்பர் 13ம் தேதி 15 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ள நீர் கசிந்து சுரங்கத்துக்குள் புகுந்ததால், எல்லா தொழிலாளர்களும் உள்ளேயே சிக்கி கொண்டனர். எலி வளை போல் குறுகிய அகலமே கொண்ட இந்த சுரங்கத்தில், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், சுரங்கம் முழுவதும் வெள்ள நீர் நிரம்பி இருந்ததோடு, தொடர்ந்து மழையும் பெய்து வந்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடற்படை நீச்சல் வீரர்கள் மூலமாக மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த இந்த மீட்புப் பணியில், சுரங்கத்தில் உள்ள நீரில் ஒரு தொழிலாளியின் சடலம் மிதந்து கொண்டிருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சுரங்கத்திற்குள் உள்ள நீரில் ெதாழிலாளி ஒருவரின் சடலம் இருப்பதை நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். தண்ணீருக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும் நவீன கருவி மூலமாக சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 210 அடி ஆழம் கொண்ட இந்த சுரங்கத்துக்குள், 160 அடி ஆழத்தில் சடலம் இருக்கலாம் என கருதப்படுகிறது. சடலத்தை சுரங்கத்தில் இருந்து வெளியே கொண்டுவரும் முயற்சியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது’’ என்றார். சுரங்கத்தில் சிக்கிய 15 தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, அவர்களின் சடலத்தையாவது மீட்டு தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: