சமத்துவம், விவசாயம் தழைக்க வேண்டி முயலை பிடித்து பொங்கலை கொண்டாடிய கிராம மக்கள்: வந்தவாசி அருகே வினோத திருவிழா

வந்தவாசி: வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில், கிராம மக்களிடம் சமத்துவம் வேண்டி முயலை பிடிக்கும் வினோத திருவிழா நேற்று நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில்  காணும் பொங்கல் அன்று, கிராம மக்களிடம் ஒற்றுமை நிலவவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி, குள்ளநரி விடும் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில் குள்ளநரி கிடைக்காததால், இந்த விழா கடந்த 5 ஆண்டுகளாக முயல் விடும் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அதன்படி, காணும் பொங்கலான நேற்று நல்லூர் கிராமத்தில் முயல் விடும் திருவிழா நடந்தது. இதையொட்டி, கிராமத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளியிடம் கடந்த 15 நாட்களாக பராமரிக்கப்பட்டு வந்த, முயல் விழா நடைபெறும் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு, அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் கிழக்கு திசை நோக்கி அமர்த்தப்பட்ட திரவுபதியம்மனின் பார்வையில் படும்படி, சுமார் 10 மீட்டர் தூரத்தில் வாழை மரம் ஒன்று நட்டு வைக்கப்பட்டது.

பின்னர், முயலின் கழுத்தில் மாலை அணிவித்து, குங்குமமிட்டு அலங்கரித்தனர். அந்த முயலை நான்கு திசை நோக்கி  எடுத்து சென்று, அம்மன் சிலை முன் கொண்டுவந்தனர். அப்போது, எந்த உடல்நிலை குறைவும் ஏற்படக்கூடாது என வேண்டிக் கொண்ட கிராம மக்கள், தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தலையில் முயலை தொட்டு ஆசி பெற்றனர்.தொடர்ந்து, அம்மன் சிலை முன் நட்டு வைக்கப்பட்டிருந்த வாழை மரத்தை பூசாரி வெட்டினார். இந்த வாழை நார்களை வீட்டில் கட்டிவைத்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையால், அதனை போட்டிப்போட்டு கொண்டு எடுத்துச் சென்றனர். பின்னர், கீழே விடப்பட்ட முயலை கிராம மக்கள் துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால், அது யார் கையிலும் சிக்காமல் வடக்கு திசை நோக்கி சென்று அங்குள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்தது. இந்த வினோத திருவிழாவில் நல்லூர், சோகத்தூர், தெய்யார், எரமலூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: