பிரம்மாண்ட சிலையை கொண்டு செல்ல ராட்சத லாரிக்கு ஜெர்மன் டயர்கள்

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பயணம் செய்கிறது. கொரக்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்ட பெருமாள் சிலை, திருவண்ணாமலை வழியாக கடந்த 8ம் தேதி இரவு செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை அடைந்தது. மறுநாள் அங்கிருந்து சிலை புறப்பட தயாரானபோது லாரியில் பொருத்தப்பட்டிருந்த 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபாத்தில் இருந்து கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கிடையில், கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அம்மாபாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலையை சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் தரிசனம் செய்து வந்தனர். சுவாமி சிலையை வலம் வந்தும் வழிபட்டனர்.

இந்நிலையில், பழுதடைந்த 15 டயர்களும் சீரமைக்கப்பட்டு லாரியில் மீண்டும் பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 12 மணியளவில் பெருமாள் சிலை மீண்டும் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் லாரியின் முக்கிய பாகங்களில் சிக்கல் ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் உடனடியாக சீரமைத்து பயணத்தை தொடங்கினர். அதன்படி, சுமார் 10 கி.மீ. தூரம் சென்ற நிலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் லாரியின் பாகங்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டது. மேலும், லாரியின் டயர்களும் மீண்டும் அடுத்தடுத்து பஞ்சராக தொடங்கியதால் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி குத்தாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

இதற்கிடையில், ெஜர்மனியில் இருந்து பெங்களூரு வழியாக 20 மாற்று டயர்கள் மண்மலை கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த டயர்களை லாரியில் பொருத்தும் பணி நேற்று அதிகாலை நடைபெற்றது. அதன்பிறகு காலை 8 மணியளவில் மண்மலை கிராமத்தில்  இருந்து லாரி புறப்பட்டது. சுமார் 8.30 மணியளவில் செங்கம் வந்தடைந்தது. அப்போது நகர  மக்கள் திரளாக கூடி, பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து லாரி 2 கிலோமீட்டர் தூரம் வரை  சென்றது. மீண்டும் டயர்கள் பழுதானது. பின்னர் அதனை சரிசெய்து மீண்டும்  புறப்பட்டது. சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்ற லாரி இரவு 8 மணியளவில் தண்டராம்பட்டு கிராமத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் இன்னும் 10  கிலோமீட்டரில் முடிவடைகிறது. இன்று புறப்பட ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது. அதன்பின்னர் தர்மபுரி எல்லை தொடங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: