இந்த மாதம் 6 நாட்களில் பெட்ரோல் ரூ.1.94; டீசல் ரூ.2.16 அதிகரிப்பு

புதுடெல்லி: இந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றுடன் சேர்த்து பெட்ரோல் மொத்தம் ₹1.94, டீசல் ₹2.16 உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.  எண்ணெய் விலை உச்சத்தில் இருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. அக்டோபர் வரை இந்த விலை உயர்வு நீடித்தது. அக்டோபர் 18 முதல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.  அக்டோபர் முதல் கடந்த 5ம் தேதி வரை  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹15.25, டீசல் ₹14.42 குறைந்துள்ளது.

 கடந்த 7ம் தேதி சென்னையில் பெட்ரோல் 22 காசு, டீசல் 8 காசு உயர்ந்தது. அடுத்து 2 நாட்களாக விலையில் மாற்றம் இல்லை. 10ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 40 காசு அதிகரித்து ₹72.79ஆகவும், டீசல் 53 காசு அதிகரித்து ₹67.78 ஆகவும் இருந்தது. இந்த மாதத்தில் இதுவரை சென்னையில் பெட்ரோல் ₹1.94, டீசல் ₹2.16 உயர்ந்துள்ளது. இதில் தொடர்ந்து கடந்த 5 நாட்களில் மட்டும் பெட்ரோல் ₹1.72, டீசல் ₹2.08 உயர்ந்துள்ளது. இரண்டரை மாதங்களாக விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் விலை உயர தொடங்கி உள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைக்க தொடங்கிய நிலையில் விலை அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: