வறட்சியால் சாவி அறுக்கும் விவசாயிகள்

சாயல்குடி : கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் வறட்சியால் கதிர்விடும் தருவாயில் பயிர்கள் கருகி போனதால் சாவி (வைக்கோல்) அறுத்து விற்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறைவான விலைக்கு செல்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவில் மானாவாரி எனப்படும் மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. இந்தாண்டு பருவ மழை காலம் கடந்து பெய்தது. இதனால் விவசாயத்தில் பின்னடைவு ஏற்பட்டது. விவசாயிகள் கடன் வாங்கி  விவசாயம் செய்தனர். நெல், மிளகாய், கம்பு, சோளம், மல்லி போன்ற பயிர்களை பயரிட்டனர். களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்தனர்.

ஆனால் தொடர்மழை இல்லாமல் நீர் வரத்தின்றி கண்மாய், குளம், பண்ணைகுட்டைகள் நிரம்பவில்லை. இதனால் கதிர் விடும் தருவாயிலிருந்த நெல், சோளம் போன்ற பயிர்கள் கருகின. இதனால் ஏமாற்ற மடைந்த விவசாயிகள், விவசாயம் பொய்த்து போனதால், எஞ்சியிருக்கும் சாவியை (வைக்கோல்) அறுத்து வருகின்றனர். சுமார் 10 முதல் 15 கிலோ வரை எடையுள்ள வைக்கோல் கட்டு ஒன்று ரூ.150க்கு விற்பனையாகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் அவற்றை வாங்கி செல்கின்றனர். இதனால் குறைந்த விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மேலச்சாக்குளம் விவசாயி சக்திமோகன் கூறுகையில், ‘இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் வறட்சியால் விவசாயம் பொய்த்துபோனது. விவசாயத்திற்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. பயிர்காப்பீடு தொகையும் வரவில்லை. இதனால் கடன் சுமையால் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் எஞ்சி இருக்கும் சாவியை அறுத்து வருகிறோம். இதனை வெளியூர் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருகிறோம்.

கோடைகாலங்களில் இப்பகுதி கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுபாடு நிலவும், எனவே அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து வைக்கோல்களை கட்டுபடியாகும் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் கோடைகாலங்களில் அரசு மானிய விலையில் விற்பதற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று வாங்க வேண்டியதில்லை, எனவே அரசு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: