கவர்னரை முற்றுகையிடுவதாக அறிவிப்பு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த முகிலன் உட்பட ஏழு பேர் கைது: போலீசாருடன் வாக்குவாதம்

மதுரை: கவர்னரை முற்றுகையிட போவதாக தெரிவித்ததால், ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர் முகிலன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017ல் ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், செல்லூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடந்தது.  இதில் ஜல்லிக்கட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்பாக இவர் உள்பட 134 பேர் மீது, அலங்காநல்லூர், பெருங்குடி, அவனியாபுரம், செல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முகிலன் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த ராஜூ, ஆரோக்கியமேரி, குமரன், கருப்பையா, காந்தி, சூசை ஆகியோர் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறை உதவி ஆணையர் அசோகன் அவர்களை தடுத்து நிறுத்தி, ‘‘சிவகங்கை வந்துள்ள கவர்னரை முற்றுகையிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்களை கைது செய்கிறோம்’’ என்று தெரிவித்தார். இதற்கு முகிலன், ‘‘மனு கொடுத்துவிட்டு வந்தபின் நடவடிக்கை எடுங்கள்’’ என கூற அதனை போலீசார் ஏற்க மறுத்தனர். இதனால் முகிலன் தரப்பினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முகிலன் உட்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து, அழைத்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: