மதுரையில் ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி : ஜன.22 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்

மதுரை: வரும் 22ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என மதுரையில் நடந்த கூட்டத்துக்குப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மதுரையில் ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நேற்று  நடந்தது. இதன்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் அளித்த பேட்டி:வரும் 22ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசு 2 கோரிக்கைகள் குறித்து மட்டுமே நீதிமன்றத்தில் விவாதிக்கிறது. வரும் 11ம் தேதிக்குள் எங்களின் பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

21 மாத நிலுவைத்தொகையை  வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர்,  ஊர்ப்புற நூலகர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் இப்படி தொகுப்பூதியத்தில்  பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களை, நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இதேபோல், தொடக்க கல்வியை  உயர்நிலை கல்வியோடு இணைப்பதற்கான முயற்சியை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக நாங்கள் கருப்புகொடி காட்டுவோம். அங்கன்வாடி, சத்துணவு மையங்களை மூடும் போக்கையும் அரசு கைவிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை செயலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.

முதல்வர் கொடுத்த வாக்குறுதிப்படி எதையும் நிறைவேற்றவில்லை. எங்களது  7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். இல்லையெனில் பேச்சுவார்த்தை நடைபெறாது. அரசின் நடவடிக்கை நீதிமன்றத்தையும், எங்களையும் ஏமாற்றும் வகையில் உள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் ஜாக்டோ - ஜியோ கலந்து கொள்ளாது. ஒன்றிரண்டு சங்கங்கள் இதில் பங்கேற்றாலும், அது ஜாக்டோ - ஜியோவுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: