முத்துப்பேட்டையில் தெருவிளக்குகள் அமைக்காததால் இருளில் மக்கள் கடும் அவதி : தளவாட பொருட்கள் வந்தும் பணிகள் துவங்கவில்லை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் தெருவிளக்குகள் அமைக்காததால் இருளில் மக்கள் கடும் அவதியடைகின்றனர். தளவாடப் பொருட்கள் வந்தும் பணிகள் துவங்கவில்லை. தெருவிளக்குகள்உடனடியாக பொருத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த மாத கஜா புயலால் நூற்றுக்கணக்கான மின்கம்பம்கள் வளைந்தும் முறிந்தும் விழுந்தன. இதனால் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. ஒரு மாதகால தாமதத்துக்கு பின்னரே வெளி மாவட்ட மின் ஒப்பந்த பணியாளர்களால் மின் சீரமைப்பு பணிகள் ஒருவழியாக நிறைவடைந்தன. இதையடுத்து பேரூராட்சி பகுதியினருக்கு மின்சாரம் கிடைத்தது.

இந்நிலையில் புதிய மின்கம்பங்களில் தெருவிளக்குகளையும் பொருத்தி உதவிட அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வது  வார்டு பகுதியிலும் தெருவிளக்கு பொருத்துவதற்கான தளவாட பொருட்கள், கோயம்புத்தூரிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பேரூராட்சி அலுவலக வாசலுக்கு வந்து சேர்ந்தன. ஆனாலும் இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் தாமதித்து வருவதாகவும் ஏதோ காரணத்தினால் முடக்கம் செய்துள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து  இடங்களும் இரவில் இருண்டு கிடப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.பேரூராட்சி பகுதிகளில்   தெருவிளக்குகளை தாமதமின்றி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர்செந்திலன் கூறுகையில், முத்துப்பேட்டையில் மின்விளக்கு பொருத்துவது தொடர்பாக ரூ.65 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தளவாட பொருட்கள் வந்துவிட்டன. ஓரிரு நாளில் திட்டப்பணிகள் தொடங்கி விடும். ஆயிரத்து 600 மின் கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: