தேக்கு மரங்கள் கடத்தப்பட்ட விவகாரம் : திருவாருர் மத்திய பல்கலை., உதவி பதிவாளர் சஸ்பெண்ட்

திருவாரூர் : தேக்கு மரங்கள் கடத்தப்பட்ட வழக்கில் திருவாருர் மத்திய பல்கலை., உதவி பதிவாளர் வேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஜா புயலால் திருவாரூரில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வந்த ஏராளமான தேக்கு மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து இந்த தேக்கு மரங்களை திருவாரூர் கிராம நிர்வாக உதவியாளர் உதவியுடன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவியாளர் கடத்தி பல்கலைக்கழகத்தின் மறைவான இடத்தில் பதுக்கி வைத்துள்ளார்.

தகவலறிந்த வனத்துறையினர் பல்கலைக்கழககத்தில் சோதனை நடத்தியதில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் நீலக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை ஊழியர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழக காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், பிளம்பர் தீனதயாளன், டிரைவர் கண்ணையன் ஆகிய 5 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் நன்னிலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம், தீனதயாளன், கண்ணையன் ஆகிய 3 பேரை வரும் 3ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவலாளிகள் முருகேசன், சிவராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரை இன்று மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பல்கலை., உதவி பதவியாளர் வேலு சஸ்பெண்ட் செய்து பதிவாளர் புவனேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேக்கு மரங்கள் கடத்தல் தொடர்பாக மேலும் சில பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிகாரி அறிவொளி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: