போடி அருகே பரிதாபம் கந்துவட்டிக்கு தோட்டத்தை கேட்டதால் விவசாயி தற்கொலை

போடி: போடி அருகே கந்துவட்டிக்காக ஏலக்காய் தோட்டத்தை எழுதி கேட்டதால்  விவசாயி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரம் கரியப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). 2 மகன்கள் உள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், ஆட்டுப்பாறையில் இரண்டரை ஏக்கரில் ஏலக்காய்  தோட்டம் வைத்துள்ளார்.  விவசாயத்திற்காக உள்ளூரை சேர்ந்த மதியழகன் (51), மூக்கையா (41) ஆகியோரிடம் 5 பைசா வட்டியில் தலா 1.50 லட்சம் வீதம் 3 லட்சம் வாங்கியுள்ளார். வட்டியை ஒழுங்காக செலுத்தி வந்த நிலையில், சில மாதங்கள் கழித்து 10 பைசாவாக வட்டியை உயர்த்தியுள்ளனர். அதையும் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே, 2 நாட்களுக்கு முன் ‘10 பைசா போதாது, 15 பைசாவாக வட்டி தரவேண்டும்’ என இருவரும் மிரட்டியுள்ளனர். ‘அவ்வளவு வட்டி கொடுக்க முடியாது; என்னை விட்டுவிடுங்கள்’ என சதீஷ்குமார் கூறியபோது, 3 லட்சத்தை உடனடியாக கொடு. இல்லையென்றால் உனது இரண்டரை ஏக்கர் ஏலக்காய் தோட்டத்தை எங்கள் பெயருக்கு எழுதிக் கொடு. இல்லாவிட்டால் நடுரோட்டில் கட்டி வைத்து விடுவோம்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அவர் தற்கொலைக்கு முன், எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் உள்ள தகவலின்பேரில், மதியழகன், மூக்கையா ஆகியோரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: