ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் மீதான புகார் பரிசீலிக்கப்படும்: டிஜிபி அலுவலகம் தகவல்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. காவலர்கள் டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு கீழே சிலை தடுப்புப் பிரிவு செயல்பட்டு வந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்தப் பிரிவு தனியாக செயல்பட்டு வந்தது. இந்தப் பிரிவின் தலைவராக ஐஜி  பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

இதனால் அவரை சிலை தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரிவில் கூடுதல் எஸ்பியாக அசோக் நடராஜன் உள்ளார். அவரைத் தவிர 15க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள், 120க்கும் மேற்பட்ட போலீசார் செயல்பட்டு வந்தனர். இவர்கள் அனைவருமே அயல்பணியாக சிலை கடத்தல்  தடுப்புப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டவர்கள். கடந்த சில நாட்களாக சிலை தடுப்புப் பிரிவுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இந்த நிலையில் சிலை தடுப்புப் பிரிவில் உயர் அதிகாரிகள் சிலரை  வேண்டும் என்று கைது செய்ய வற்புறுத்துவதாகவும்,

அதற்கு ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும் என்று சில கீழ் மட்ட அதிகாரிகள் தெரிவித்ததாகவும், இதனால் உயர் அதிகாரிகளுக்கும், கீழ்மட்ட  அதிகாரிகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, 14 எஸ்.ஐ.க்கள் மற்றும் 46 போலீசார் ஒன்று சேர்ந்து, பொய்யாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யச் சொல்லும் உயர் அதிகாரிகள் மீது  எழுத்துப்பூர்வமாக புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் 60 பேரும் ஒன்று சேர்ந்து டிஜிபியிடம் புகார் செய்ய சென்னைக்கு இன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ஓய்வுபெற்று, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுவுக்கு தெரியவந்தது. இதனால், கடலூர், கோவை, திருப்பூர், மதுரை, சேலம், சிவகங்கை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி,  திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 எஸ்.ஐ.க்கள், சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம்,  கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 46 போலீசார் என மொத்தம் 60 பேரையும் உடனடியாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில்  இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் 60 பேரையும் மீண்டும் மாவட்டங்களில் பழைய பணிகளில் சேர்க்கும்படியும் அவர்களுக்குப் பதில் 14 எஸ்.ஐ.க்கள், 46 போலீசாரை உடனடியாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு  அனுப்பி வைக்கும்படியும் மாவட்ட எஸ்பிக்களுக்கு மெயில் அனுப்பியுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் போலீசாரில் சரிபாதி அளவுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, மாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் டிஜிபியிடம் பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்ய பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

உரிய ஆவணங்கள், சாட்சிகள், இல்லாமல் வழக்கு பதிய சொன்னார். சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த ஒரு டிஎஸ்பி, நான்கு ஆய்வாளர்கள், ஒரு ஏடிஎஸ்பி, ஆறு சார்பு ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் 12 பேர் தங்களுக்கு சிலைகடத்தல் பிரிவில் இருந்து இடமாற்றம் வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: