கட்டி முடித்து 53 ஆண்டுகளாகிறது : மேம்படுத்தப்படாத வள்ளியூர் பஸ் நிலையம்

வள்ளியூர்:  கட்டி முடித்து 53 ஆண்டுகளான நிலையில், வள்ளியூர் பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் எதுவும் நடைபெறாததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நெல்லை நாகர்கோவில் இடையே வளர்ந்து வரும் நகரங்களுள் வள்ளியூரும் ஒன்று. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில்   100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், தினமும் வியாபாரம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிமித்தமாக வள்ளியூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். கடந்த 1966ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பஸ் நிலையம், இப்பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்படுத்தப்படவில்லை என்பது நீண்டநாளைய குற்றச்சாட்டாக உள்ளது. வள்ளியூரில் இருந்து இயக்கப்படும், வந்துசெல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதற்கான அடிப்படை வசதிகள் துளியும் இல்லை.

பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் வள்ளியூர் பஸ் நிலையத்தில் இருந்து 5 மினிபஸ்களும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பஸ் நிலையம் வந்துசெல்லும் பொதுமக்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும்   இலவச கழிப்பறையை பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் சுத்தமின்றி கதவு உடைந்து காணப்படுகிறது. இங்கும் அவ்வப்போது மதுபிரியர்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். அங்கேயே குடித்துவிட்டு படுத்து தூங்குகின்றனர். இதனால் கழிவறைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் அச்சம் கொள்கின்றனர். இதன் காரணமாக திறந்தவெளியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் இயங்கும் கட்டண கழிப்பிடமும், முறையான பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. இங்குள்ள செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சந்தையருகே ஓடும் கால்வாயில் கலக்கிறது. மேலும் பஸ் நிலைய கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இதே கால்வாயில் சேர்கிறது. பேரூராட்சி  நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 30க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைத்தும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை, நிழற்குடை வசதி செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் நனைந்தபடியும், வெயில் நேரங்களில் சுட்டெரிக்கும் அனலில் காய்ந்தபடியும் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். மேலும் பஸ்களை நிறுத்துவதற்கான இடவசதியின்றியும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே வள்ளியூர் பஸ் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகளை துவங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமாஜ்வாடி மாநில இளைஞரணி மலரவன் கூறுகையில், வள்ளியூர் பகுதியில் பெருகியுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை. எனவே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய விசாலமான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக பஸ் நிலையத்தில் பெண்களின் அச்சத்தை போக்கும் வகையில் போதிய மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். காட்சிப்பொருளான எரியாத மின்விளக்குகளை மாற்ற வேண்டும், என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: