வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியாவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியாவிற்கு நேரடியாக பெரிய கன்டெய்னர் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சரக்கு பெட்டகங்கள் சிறிய கப்பல்களில் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்றிச்செல்லப்பட்டு, அங்கிருந்து பிற நாடுகளுக்கு பெரிய கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் காலம் விரயமாவதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதில் தாமதமும், அதிக செலவும் ஏற்படுவதாக ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தனியார் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து முதல் முறையாக சீனா மற்றும் மலேசிய நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை நேற்று முதல் துவங்கியது. மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சியில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதல் முறையாக இயக்கப்படும் பெரிய சரக்கு கப்பல் இதுவே ஆகும். இக்கப்பலில் சுமார் 4,300 கன்டெய்னர்கள் (20 டியுஸ்) ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரைவாக சென்றடைய முடியும். தூத்துக்குடி துறைமுகம் சார்ந்த பகுதியில் துறைமுகத்தை சார்ந்த பகுதிகளில் 100 கோடியில் சிறப்பு தொழில் வளர்ச்சி பூங்கா அமைக்கப்படும் என  கட்கரி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: