ரபேல் ஒப்பந்தம், ராமர் கோயில், காவிரி பிரச்னை போராட்டம் எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்தம், ராமர் கோயில் விவகாரம், காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 2ம் நாளாக நேற்று காலை மக்களவை கூட்டம் தொடங்கியது. அப்போது அவையில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மூத்த பாஜ தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்த நிலையில், அவையில், 11 முன்னாள் எம்பிக்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ், சிவசேனா மற்றும் அதிமுக எம்பிக்கள் கோஷமிட்டபடி அவையின் மையப் பகுதிக்கு முன்னேறினர். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோல், சிவசேனா உறுப்பினர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணியை உடனே தொடங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். அதிமுக உறுப்பினர்கள் காவிரி டெல்டாவில் வசிக்கும் விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வகை செய்ய கோரி முழக்கமிட்டனர்.

அப்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையில் அமைதியை ஏற்படுத்த முயன்றார். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். பின்னர் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதேபோல், மாநிலங்களவையிலும் நேற்று காலை கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் மரணமடைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் எச்.டபிள்யூ,புஷ்சுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மேரி கோமுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், சிறந்த விளையாட்டு வீரர்கள் சோனியா சோஹல், சிம்ரஞ்சித் சவுர் மற்றும் லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோருக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர்கள் அவை அலுவல்கள் குறித்து பட்டியலிட்டனர். அப்போது, திமுக மற்றும் அதிமுக எம்பி.க்கள் காவிரி பிரச்னை தொடர்பாக முழக்கமிட்டனர். அப்போது, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வை பாதுகாக்க கோரும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை பிடித்தபடி அதிமுக எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை நோக்கி சென்றனர். அவர்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இருக்கைகளுக்கு திரும்பும்படி கேட்டுக்கொண்டார். அப்போது பல்வேறு கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளதால் அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், அனைத்து பிரச்னைகளும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் வெங்கையா நாயுடு உறுதியளித்தார். ஆனாலும் 2 கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் முதலில் நண்பகல் வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: