உர்ஜித் படேல் விலகிய அடுத்த நாளே ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக சக்தி காந்ததாஸ் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக, நிதி கமிஷன் தலைவராக இருந்த சக்தி காந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், கலெக்டர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட முக்கிய  பொறுப்புகளை தமிழகத்தில் வகித்துள்ளார்.  ஒரு பக்கம் ரூபாய் மதிப்பு தள்ளாட்டம், இன்னொரு பக்கம் அந்நிய முதலீடு சரிவு என இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல், நேற்று முன்தினம் திடீரென பதவி விலகினார். இது கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரகுராம் ராஜனை தொடர்ந்து, குஜராத்தை சேர்ந்தவரான உர்ஜித் படேலை மத்திய அரசு மிகுந்த எதிர்பார்ப்புடன் கவர்னராக அமர்த்தியது. ஆனால் அவர் பதவியில் அமர்ந்த சில மாதங்களில் மத்திய  அரசுக்கும் அவருக்கும் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.  

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் அதிகரிக்க ஆரம்பித்தது. ரிசர்வ் வங்கியிடம் உபரியாக இருக்கும் 3.6 லட்சம் கோடி ரூபாயை அரசு திட்டங்களுக்கு செலவிட அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்பது தான்  அரசின் இலக்கு. ஆனால், உர்ஜித் படேல் அதற்கு சம்மதிக்கவில்லை.

 நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன் இதுதொடர்பாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இது வெளியில் தெரியும் அளவுக்கு நிலைமை மோசமானதும், பிரதமர் மோடி தலையிட்டு உர்ஜித் படேலை அழைத்து  பேசினார். அதன் பின்னும் உர்ஜித் சமாதானம் அடையவில்லை.  நிலைமை சுமுகமாக திரும்பி விட்டதாக எண்ணிய வேளையில், திங்கள் அன்று உர்ஜித் படேல் தன் பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். இதை தொடர்ந்து இந்த பதவிக்கு ரிசர்வ் வங்கி துணை கவர்னர் என்.எஸ்.  விசுவநாதன், மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், சர்வதேச நிதிக்குழு செயல் இயக்குனர் சுபீர் கோகர்ன் ஆகியோர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், சக்தி காந்ததாசை மத்திய அரசு நியமனம் செய்து அறிவித்தது. தமிழகத்தில் 1980ம் ஆண்டு ஐஏஎஸ் பணியை தொடங்கிய இவர், கடைசியாக பொருளாதார விவகார செயலாளராக பதவி  வகித்து 37 ஆண்டு கால ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு, இவரை 15வது நிதி கமிஷன் உறுப்பினராக மத்திய அரசு நியமித்தது. சக்தி காந்ததாசை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்க ஏஏசி ஒப்புதல் அளித்துள்ளது எனவும், இந்த பதவியில் இவர் 3 ஆண்டுக்கு நீடிப்பார் எனவும் மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி

* சக்தி காந்ததாசின் சொந்த மாநிலம் ஒடிசா. 1955ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி பிறந்தார். ஒடிசாவை சேர்ந்தவராக இருப்பினும் தமிழகத்தில்தான் இவரது ஐஏஎஸ் பணி துவங்கியது.

* 1980ம் ஆண்டு தமிழக அணி ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்ததாஸ், தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர், வருவாய் துறை சிறப்பு கமிஷனர், வணிக வரித்துறை செயலாளர், தமிழ்நாடு எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு கழக திட்ட இயக்குநர் பொறுப்புகளை வகித்துள்ளார். திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணியில் இருந்துள்ளார்.

* மத்திய அரசில் பொருளாதார விவகார செயலாளர், உரத்துறை செயலாளர், பொருளாதார விவகாரத்துறை சிறப்பு செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். 2014 ஜூன் மாதம், பிரதமர் தலைமையிலான அரசு பணியாளர்  நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை குழு வருவாய்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதித்துறையின் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவருக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

* ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து விலகியபோது, சக்தி காந்ததாஸ் அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அப்போதே எழுந்தது. பண மதிப்பு நீக்கத்தில் இவரது பங்கு மிக  முக்கியமானது எனவும் கூறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: