தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தயங்க மாட்டோம்?: ராணுவ துணை தளபதி பேட்டி

டேராடூன்: ‘‘தேவைப்பட்டால் தீவிரவாதிகளுக்கு எதிராக மற்றொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்’’ என ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் கடந்த 2016ம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் 19 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, கடந்த செப்டம்பர் 29ம் தேதி,  ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது. எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு ராணுவத்தினர் திரும்பினர். தாக்குதலுக்குப் பின் இதை அரசு  வெளிப்படையாக அறிவித்தது. இதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் கூறியது. ராணுவத்தின் மீது காங்கிரஸ் சந்தேகப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்  நடவடிக்கையை ஆளும் பாஜ கட்சி அரசியலாக்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் 427 அதிகாரிகள் நேற்று முன்தினம் தங்கள் பயிற்சியை முடித்தனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு துணை ராணுவ தளபதி  லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரிடம், சர்ஜிக்கல் ஸ்டிரைக், போர் பணிகளில் பெண் அதிகாரிகளை ஈடுபடுத்துவது போன்ற திட்டங்கள் குறித்து நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ‘‘எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது ராணுவத்தின் பலத்தை காட்டுகிறது. எங்களுக்கு தீவிரவாதிகள் மீண்டும் சவால்  விடுத்தால், மற்றொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தயங்கமாட்டோம். பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகள், நாட்டின் பிற எல்லைகளை விட வித்தியாசமானது. இதனால், அங்கு பெண்களை போர் பணியில் ஈடுபடுத்த பல  அம்சங்கள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: