துர்நாற்றம் தாங்க முடியவில்லை பாளையில் உரக்கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நெல்லை: பாளையங்கோட்டை காமராஜர் நகரில் உரக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இவை நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மண்டங்களிலும் தினந்தோறும் சேரும் குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு மாநகராட்சி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் இந்த உரக்கிடங்குகள் குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ளதால் உரக்கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றத்தினால் பொதுமக்கள் நுண்ணுயிர் உரக்கிடங்குகள் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெல்லை நீதிமன்றம் எதிரே உள்ள 16வது வார்டு காமராஜர் நகரில் குடியிருப்பு பகுதி மற்றும் சிறுவர் பூங்கா அருகில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக மக்கும் குப்பை சேகரிக்கபட்டு வருகிறது. இந்த உரக்கிடங்கில் தினந்தோறும் ஹோட்டல் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு விதமான கழிவுகள் கொட்டப்பட்டு உரம் தயாரிக்கப்படுவதால் காற்று அதிகமாக அடிக்கும் போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை கண்டித்தும், உரக்கிடங்கை உடனடியாக அகற்றக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் இன்று உரக்கிடங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜான்ஆபிரகாம், செயலாளர் சோமசுந்தரம், உதவி செயலாளர் போத்திராஜ், பொருளாளர் செல்லத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு: இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரக்கிடங்கை அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதோடு ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துவிட்டு வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: