நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாள் ஆய்வு முடிந்து மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை திரும்பினர். கஜா புயல் பாதிப்பு குறித்து அறிய மத்தியக்குழு, உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் கடந்த 24ம் தேதி மாலை தமிழகம் வந்தது. அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும், நேற்றுமுன்தினம் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டனர். இரவில் வேளாங்கண்ணியில் தங்கிய மத்திய குழுவினர் நேற்று காலை அங்கிருந்து நாகை மாவட்டத்தில் ஆய்வு நடத்த சென்றனர். புயலுக்கு பின்னர் செயல்படாமல் உள்ள விழுந்தமாவடி அருகே உள்ள வேட்டைகாரனிருப்பு ஆளில்லா துணை நிலைமின் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மின்பாதை, மின் கம்பங்கள் போன்றவற்றின் பாதிப்புகள் குறித்த புகைப்பட காட்சியை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து விழுந்தமாவடி புயல் பாதுகாப்பு மையத்திற்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டனர். அப்போது முனியம்மாள் என்ற 90 வயது மூதாட்டி எங்கள் பயிர்கள் எல்லாம் பாதித்து விட்டது, இனி எப்படி வாழ்வோம் என்று கூறி கதறினார். அங்கு மதிய உணவுக்கு தயார் செய்யப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு பார்த்தனர்.
கோயில்பத்து பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு முன்பே புயலில் சாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பெரியகுத்தகை பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் தங்கியிருந்த மக்களை சந்தித்தனர். அப்போது சுப்பையன் என்ற விவசாயி மத்திய குழுவினர் காலில் விழுந்து எங்களுக்கு சோறு போட்ட மரங்கள் எல்லாம் காற்றில் விழுந்து விட்டது. எங்களுக்கு இனி வருமானமே கிடையாது என்று கூறி கதறினார். எங்களுக்கு இழப்பீட்டு தொகையை அதிகம் வழங்க வேண்டும் என்று கேட்டார். அப்போது சில விவசாயிகள் மனுவை மத்திய குழுவிடம் வழங்கினர். அதை தொடர்ந்து மத்திய குழுவினர் புஷ்பவனம் சென்றனர். அங்கு கடலில் இருந்து புயல் நேரத்தில் சுமார் 400 மீட்டர் தூரம் வீசி எறியப்பட்டு சேற்றில் புதைந்த மீனவர்களின் படகுகள், வலைகளை பார்வையிட்டனர். வேளாங்கண்ணியில் மதியம் தங்க சென்றனர். அப்போது ஏராளமான தென்னை, மா, விவசாயிகள் மத்திய குழுவிடம் மனு கொடுத்தனர். மாலையில் காரைக்கால் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை பார்வையிட்டனர். இதையடுத்து 3 நாள் ஆய்வை முடித்துக்கொண்டு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டனர்.
“அறிக்கையில் பரிந்துரை செய்வோம்”மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சார்ட் வேளாங்கண்ணியில் அளித்த பேட்டி: கஜா புயல் தாக்கிய புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை பார்வையிட்டோம், தென்னை, மா போன்ற மரங்கள் விழுந்து கிடப்பது சாலையில் போகும்போதே ேசதத்தின் அளவு தெரிகிறது. தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ள விவரம்பற்றி, மத்திய அரசுக்கு உரிய நிவாரணம் வழங்க எங்கள் அறிக்கையில் பரிந்துரைப்போம். தென்னை விவசாயிகள் கண்ணீர் வடித்ததை பார்த்து எங்களுக்கும் கண்ணீர் வந்து விட்டது. இது குறித்து சென்னையில் முதல்வருடன் கலந்து பேசி மத்திய அரசுக்கு அறிக்கை கொடுப்போம். நாகை மாவட்டத்தில் புயலுக்கு முன் எடுத்த நடவடிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இப்போது மீட்பு பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் முழுமனதுடன் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர், அவர்களை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.காவல் துறை பொதுமக்கள் தள்ளுமுள்ளுமீனவ பஞ்சாயத்தார்களிடம் சேதம் பற்றி மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். அப்போது விழுந்தமாவடி கிராம மக்கள் மத்திய குழுவை மறித்து தங்கள் குறைகளை தெரிவிக்க முற்பட்டனர். அப்போது காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்தியகுழு அவர்களை கடந்து சென்ற நிலையில் காவல் துறையினரை தள்ளிவிட்டு, பின்னால் வந்த வாகனங்களை மறித்தனர். இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி