ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு 27 நாடுகள் ஒப்புதல்

லண்டன் : ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட்  ஒப்பந்தம் 18 மாதங்கள் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் இறுதி ஆகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து அந்நாட்டின் பிரதமர் தெரசா மே தயாரித்த பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரிட்டனின் முடிவு குறித்து கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் அதிக ஆதரவு கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உடனான உறவு குறித்த பிரெக்சிட் ஒப்பந்தத்தை தெரசா மே தயாரித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை ஐரோப்பிய யூனியன் தலைநகரான புருசெல்ஸ் நகரில் தெரசா மே  ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். அப்போது தெரசா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு 27 நாடுகளும் ஒப்புதல் அளித்தன. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிடும்.  

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் இதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் இது கொண்டாட வேண்டிய தருணம் இல்லை என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்  ஜீன்-கிலாட் ஜங்கர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்த பிரெக்சிட் உடன்படிக்கையின் அம்சங்கள்  ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: