கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவ.27க்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல்: டேனியல் ரிச்சர்டு

சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து நவ., 27 க்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் உட்பட, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடவும், சேதங்களை மதிப்பிடவும், மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது. குழுவில் மத்திய உள்துறை இணை செயலர், டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசகர், கவுல், வேளாண்மைத் துறை இயக்குனர் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். இன்று (நவ., 24) காலை, முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமையில் நடக்கும், அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் துறை வாரியாக ஏற்பட்டுள்ள சேதங்களை, படங்களுடன், மத்திய குழுவுக்கு விளக்கி கூறப்பட்டது. இதனையடுத்து  மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறுகையில்; கஜா புயலால் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து நவ.,27 க்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும். முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு ஆய்வுக்காக செல்கிறோம் என அவர் கூறினார்.

இதனிடையே மத்திய குழுவின் ஆய்வு பயணதிட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டையிலும், இரவு 8.30 மணிக்கு தஞ்சாவூரிலும் ஆய்வு நடத்துகின்றனர். நாளை(நவ.,25) காலை 7 மணி முதல் மீண்டும் தஞ்சையிலும், மாலை3.30 மணிக்கு திருவாரூரிலும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திங்கள் காலை7.30 மணிக்கு நாகை மற்றும் வேதாரண்யத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி, காரைக்காலிலும் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை தயார் செய்து நவ., 27 க்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிக்கையில் கூறி உள்ளபடி மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழக அரசுக்கான நிதியை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: