கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். முன்னதாக வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, மத்திய குழுவுக்கு `கஜா’’ புயல் பாதிப்பு குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கி கூறப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும்  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சில குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.

அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர்கள் நேரில் சந்தித்து புயல் பாதிப்பு குறித்து கேட்டறிய உள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் அதாவது 26ம் தேதி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா’’ புயல் தாக்கி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.

சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு முறிந்து விழுந்துள்ளன. புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும், இன்னும் சில இடங்களுக்கு நிவாரண உதவியே கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான நிதியை கேட்டு பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக புனரமைப்புக்காக உடனடியாக 1,500 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் மத்திய குழு புயல் சேதம் குறித்து ஆய்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: